ஒன்றிய கவுன்சிலர்கள் சாலை மறியல்

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக்கூறி கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-11-10 00:26 IST

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக்கூறி கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒன்றியக்குழு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் அனிதா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் அனிச்சம் தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது 5-வது வார்டு கவுன்சிலர் யுவராஜ் 9-9-2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மான புத்தகத்தில் நான் கையெழுத்து போடவில்லை. என்னுடைய கையெழுத்து முறைகேடாக போடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இவரைத் தொடர்ந்து 1-வது வார்டு உறுப்பினரும், ஒன்றிக்குழு துணை தலைவருமான முனியம்மாள், 2- வது வார்டு கவுன்சிலர் ராணி, 3-வது வார்டு கவுன்சிலர் கோமதி, 8-வது வார்டு கவுன்சிலர் தீபா ஆகியோர் எழுந்து எங்கள் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது. டென்டர் வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுகிறது. தலைவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறது, தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என புகார் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனையடுத்து கூட்டம் பிற்பகல் நடைபெறும் என தலைவர் ஒத்திவைத்தார். இதனையடுத்து கூட்டத்தை புறக்கணித்த 5 கவுன்சிலர்களும் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், பிச்சாண்டி மற்றும் போலீசார் விரைந்து வந்து ஒன்றிய குழு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறபடுத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து வந்த கவுன்சிலர்கள் 5 பேரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டாயுதபாணி பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

தலைவர் விளக்கம்

இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் அனிதா கூறுகையில், மாவட்டத்தில் கழிவுநீர் கால்வாய், சிறுபாலம், பைப் லைன் அமைத்தல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த 5 கவுன்சிலர்கள் சிமெண்டு சாலை பணிக்கு மட்டும் எழுதி கொடுத்தனர். மாவட்டத்தில் தற்போது சிமெண்டு சாலை அமைக்கும் பணிக்கு உத்தரவு வழங்கவில்லை. அதனால் இவர்கள் கேட்ட பணி பரிசீலனையில் உள்ளது. முறைகேடாக கையெழுத்து போட்டுள்ளது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் ஒருதலைபட்சமாக செயல்படாமல், நியாயமான முறையில் தான் செயல்படுகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்