தரமின்றி போடப்பட்ட சாலை

குன்னூர் பெட்போர்டில் தரமின்றி போடப்பட்ட சாலை அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Update: 2023-08-26 23:30 GMT

குன்னூர்

குன்னூர் பெட்போர்டில் தரமின்றி போடப்பட்ட சாலை அகற்றப்பட்டது. தொடர்ந்து புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

குன்னூர் அருகே பெட்போர்டு பகுதி உள்ளது. இந்த வழியாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா தலங்களுக்கு சாலை செல்கிறது. இதனால் அந்த வழியாக தினமும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, சிங்காரா, கரன்சி, ஆடர்லி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

பெட்போர்டு-லேம்ஸ்ராக் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பெட்போர்டு முதல் மேல் குன்னூர் போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையை சீரமைக்க குன்னூர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

பொதுமக்கள் எதிர்ப்பு

தொடர்ந்து ஜல்லி, தார் போட்டு சாலையை சீரமைக்கும் பணி நடந்தது. அந்த பணி தரம் இல்லாமல் நடந்ததாக கூறி, அந்த பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. அந்த பணியும் தரமின்றி நடந்து வந்ததாக தெரிகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே போடப்பட்ட சாலையை அகற்றி விட்டு புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரீனிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில், பொக்லைன் எந்திரம் மூலம் தரமின்றி அமைக்கப்பட்ட சாலையை ஒப்பந்ததாரர் பெயர்த்து எடுத்து அகற்றினார். தற்போது பெட்ேபார்டு முதல் மேல் குன்னூர் போலீஸ் நிலையம் வரை உள்ள சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்