விழுப்புரம் நகரில்ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்கந்தலாகி கிடக்கும் சாலைகளால் அல்லல்படும் பொதுமக்கள்

விழுப்புரம் நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலைகள் கந்தலாகி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் தினமும் அல்லல்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-07-25 18:45 GMT


ஆட்சிகள் பல மாறினாலும் மக்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படாமல் உள்ளது. அதற்கு சான்றாக விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை வசதி, வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை பணி

தற்போது அப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் முழுமை பெறாமல் சாலைகளின் நிலைமை படுமோசமாக இருப்பதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. நகரில் 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியாக இருந்த வழுதரெட்டி, சாலாமேடு, காக்குப்பம், பானாம்பட்டு, எருமனந்தாங்கல் ஆகிய 5 ஊராட்சி பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டன.

இவ்வாறு நகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. இவ்வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.251 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது.

இதற்காக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 17 வார்டு பகுதிகளிலும் ஏற்கனவே இருந்த தார் சாலை, சிமெண்டு சாலைகளை உடைத்து பள்ளம் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் இன்னும் முடிவடையாமல் மந்தகதியில் நடப்பதாக நகர மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆமை வேகத்தில்

இத்திட்டத்தில் பாதாள சாக்கடை குழாய், ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டு அடுத்தகட்டமாக வீடுகளுக்கான இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக உடைக்கப்பட்ட சாலைகள், தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமலும், சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும் அப்படியே விடப்பட்டுள்ளது. ஏனெனில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த இடங்களில் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மட்டுமே பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததாக கருதப்படும். அதன் பிறகே அப்பகுதியில் சாலையும் அமைக்கப்படும்.

ஆனால் பல இடங்களில் ஆள் இறங்கு குழிகளுக்கிடையே இணைப்பு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாமலும் இருக்கிறது. இப்பணிகள் தொடங்கப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுவதுமாக முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் ஏற்கனவே தோண்டப்பட்டு பள்ளங்களாக உள்ள இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமலும், புதிய சாலைகள் அமைக்கப்படாமலும் கிடப்பிலேயே இருக்கிறது. 3 முறை டெண்டர் விடப்பட்டும் இப்பணிகள் முடிக்கப்படவில்லை.

கந்தல், கந்தலான சாலைகள்

இதன் காரணமாக படுமோசமாக காட்சியளிக்கும் சாலைகளால் பொதுமக்கள் தினம், தினம் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் தற்போது பெய்த பலத்த மழையினால் பல இடங்களில் சாலைகள் அனைத்தும் மேலும் படுமோசமாக மாறியுள்ளது.

குறிப்பாக சாலாமேடு, கே.கே.சாலை, மணிநகர், கணபதி நகர், எஸ்.ஐ.எஸ். நகர், என்.எஸ்.கே. நகர், சீனிவாசா தெரு, வள்ளலார் நகர், சுதாகர் நகர், பெரியார் நகர், சர்வேயர் நகர், சிங்கப்பூர் நகர், வழுதரெட்டி, வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், காந்தி நகர், மஞ்சு நகர், வி.ஜி.பி.நகர், பானாம்பட்டு, ராகவன்பேட்டை, காக்குப்பம், எருமனந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் கந்தல், கந்தலாக காட்சியளிக்கிறது.

இந்த சாலைகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாகியுள்ளது. இப்பகுதிகளில் வடிகால் வாய்க்கால் வசதியும் அமைக்கப்படாததால் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி ஏதோ பார்ப்பதற்கு வயல்வெளி போன்று மாறியுள்ளது.

விரைந்து முடிக்க கோரிக்கை

இந்த சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் எத்தனையோ முறை போராட்டம் நடத்தியும் பலனில்லை. மக்கள் வசிக்கிற குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, ஆனால் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் மட்டும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்துள்ளதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட 17 வார்டு பகுதிகளிலும் ஆமை வேகத்தில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதி இ்ல்லை

இதுகுறித்து விழுப்புரம் என்.எஸ்.கே. நகரை சேர்ந்த சேகர் கூறுகையில், விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியான சாலாமேடு பகுதியில் சாலை வசதிகள், குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, வடிகால் வாய்க்கால் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பாதாள சாக்கடை திட்டப்பணிகளும் முழுமை பெறாத நிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகள் கந்தல், கந்தலாக கிடக்கிறது. இதனால் மக்கள் தினம், தினம் துன்பப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்றார்.

மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டும்

விழுப்புரம் சீனிவாசா தெருவை சேர்ந்த சங்கர் கூறும்போது, எங்கள் தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. அதன் பிறகு சாலை அமைக்கப்படாமல் மண்ணை கொட்டி சமப்படுத்திவிட்டு சென்றனர். இதனால் சாதாரண மழை பெய்தாலே சேறும், சகதியுமாகி விடுவதால் நடந்து செல்லக்கூட முடியாமலும், அத்தியாவசிய தேவைக்காக கடைவீதிக்கு செல்ல முடியாமலும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்