பாதாள சாக்கடை, சாலை மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை, சாலை மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2022-09-03 17:45 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 5 ஊராட்சிகளான காகுப்பம், பானாம்பட்டு, எருமனந்தாங்கல், வழுதரெட்டி, சாலாமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 17 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாமலும், சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாகியுள்ளது. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்து வருவதால் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிப்பது மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கவுன்சிலர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பொறியாளர் ஜோதிமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் மணவாளன், புருஷோத்தமன், நந்தா நெடுஞ்செழியன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சுரேஷ்ராம், இம்ரான்கான், பா.ம.க. கவுன்சிலர் இளந்திரையன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் வித்தியசங்கரி உள்ளிட்டவர்கள் பேசியதாவது:-

நகராட்சியுடன் சேர்க்கப்பட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் விபத்துகள் நடக்கிறது. சாலை மறுசீரமைப்பு பணிகளும் முறையாக நடக்கவில்லை.

எல்லா வார்டுகளிலும் உள்ள சாலைகள் மழையால் சேறும், சகதியுமாகியுள்ளது. அவற்றை அகற்றிவிட்டு சாலை மறுசீரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும். அதுவரை ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய தொகையை நிறுத்தி வையுங்கள். ஒவ்வொரு வார்டாக, ஒவ்வொரு தெருவாக அதிகாரிகள் ஆய்வு செய்து பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை மறுசீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.

இதற்கு நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பதிலளித்து பேசுகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கவுன்சிலர்கள் தெரிவிக்கும் பகுதிக்கு முக்கியத்துவம் அளித்து இத்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்