ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் கட்டப்பட்ட தூத்துக்குடி பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. திறந்து வைத்தனர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் கட்டப்பட்ட தூத்துக்குடி பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 ேகாடி செலவில் கட்டப்பட்ட தூத்துக்குடி அண்ணா பஸ் நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு, கனிெமாழி எம்.பி. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பஸ் நிலையம் திறப்பு விழா
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பஸ் நிலையம், அம்பேத்கர் நகரில் ரூ.29 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலையில் தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து ெகாண்டு திட்டங்களை தொடங்கி வைத்தனர்.
80 சதவீதம் பணி
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பஸ் நிலையத்தில் சிலர் அவர்களின் கட்சி தலைவரின் படத்தை ஒட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினர் இந்த திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை அ.தி.மு.க.வினர் திறந்து வைத்தார்கள். அப்போது நாங்கள்தான் திறப்போம் என்று சொல்லவில்லை. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அவர்கள்தான் திறந்து வைப்பார்கள். 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உங்களால் முடிக்க முடியவில்லை.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 80 சதவீதம் பணிகளை முடித்து உள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி தருகிறார். அதனை நிதியமைச்சர் பக்குவமாக பிரித்து கொடுக்கிறார். மேலும் தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயமாட்டார்.
குடிநீர் திட்டம்
முதல்-அமைச்சர் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து உள்ளார். இதில் ரூ.16 ஆயிரம் கோடியை அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு பிரித்து கொடுத்து அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். நகர்ப்புறங்களில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், சுகாதார வசதி சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அனைத்து சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 38 இடங்களில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 இடங்களுக்கு மேல் மார்க்கெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து நகர்ப்புறங்களிலும் குடிநீர் வழங்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அதனை முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.
நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள். உங்கள் செயல்பாடு காரணமாக மீண்டும் தி.மு.க. ஆட்சி மலரும். இதனால் மீண்டும், மீண்டும் நம் முதல்-அமைச்சர் ஆட்சியில் இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி கலெக்டர் கவுரவ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில தி.மு.க. வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-----------