உழவர் சந்தைகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-09-04 17:47 GMT


திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகளில் விவசாயிகளுக்கு இடையூறாக உள்ள வியாபாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளில் வியாபாரிகள் பாதையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தெற்கு உழவர் சந்தை விவசாயிகள் பல்லடம் சாலையில் மாட்டுவண்டிகளை நிறுத்தி வைத்து வியாபாரம் செய்வோம்.

சாலையோரம் தடுப்புச்சுவர்

திருப்பூர் தெற்கு அவினாசிபாளையம் பகுதியில் தொட்டியபாளையத்தில் இருந்து கொடுவாய் செல்லும் தார்ச்சாலை அருகே ஆழமான பள்ளமும், அதனருகே கிணறும் உள்ளது. தார்ச்சாலைக்கும், நிலத்திற்கும் இடையே 5 அடி இடைவௌி மட்டுமே உள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன்பு சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் தார்ச்சாலை பழுதடைந்து பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்.

வரி விதிப்பில் குளறுபடி

திருப்பூர் மாநகராட்சியின் பல இடங்களில் வணிக பயன்பாடு கட்டிடத்தை தொழில்துறை கட்டிடம் என்று மாற்றம் செய்து அதிக வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. குப்பை வரி குளறுபடிகள் காரணமாக தவறான வரி விதிக்கப்படுவதை சரிசெய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டியன் கோவில் கிராமம் கருணைபாளையம் பிரிவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் பொதுவெளியில் விடப்படுகிறது. இதனால் நிலம், நீர் மற்றும் காற்றுமாசு ஏற்பட்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கண்டியன் கோவில் ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன்கருதி ஆய்வு செய்து சுத்திகரிப்பு ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்