கவர்னரை தரம் தாழ்ந்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - தமிழக பாஜக துணைத்தலைவர்
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கவர்னரை தரம் தாழ்ந்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.;
சென்னை,
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கவர்னரை தரம் தாழ்ந்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
"கவர்னருக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு?.. உங்களுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாட்டில் ஏதோவொரு தொகுதியில் போட்டியிடுங்கள், உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்களை சந்தியுங்கள், உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் சொல்லுங்கள். "செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்று தமிழக முதல்-அமைச்சரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அநாகரீகமான அரசியலும் கூட. செருப்பால அடிப்பாங்க என்ற சொல் வன்மத்திற்குரியது, சட்டத்திற்கு புறம்பானது.
ஜெயிக்கவில்லையென்றால் மக்கள் 'செருப்பால் அடிப்பார்கள்' என்று அர்த்தம் என்றால், திமுக எண்ணற்ற கணக்கான தேர்தல்களில் தோல்வியுற்றது உலகத்திற்கே தெரியும். 1980, 1984,1991 தேர்தல்களில் தோற்ற திமுகவை தமிழக மக்கள் செருப்பால் அடித்தார்கள் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் தந்தை கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிறார். ஆனால், நீங்கள் கேட்ட கேள்வியை இங்கே கேட்டு உங்கள் அளவிற்கு நான் தரம் தாழ்ந்து பேச மாட்டேன்.
2001, 2011,2016 தேர்தல்களில் படு தோல்வியடைந்தீர்களே? மக்கள் திமுகவை செருப்பால் அடித்தார்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமா? 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மக்கள் திமுகவை செருப்பால் அடித்து புறமுதுகிட்டு ஓடச்செய்தார்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா?
மக்களின் இவ்வளவு செருப்படியையும் பெற்று கொண்டு தொடர்ந்து திமுக தேர்தல்களில் போட்டியிடுவது கேவலமில்லையா? வெட்கக்கேடு இல்லையா? மானக்கேடு இல்லையா?
ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதல்-அமைச்சரின் மகன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கவர்னரை தரம் தாழ்ந்து தரம் கெட்டு 'செருப்பால் அடிப்பாங்க' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதோடு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதிர்ச்சியற்ற, அராஜகமான, அநாகரீகமான, மக்களை தூண்டி விடும் முறையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தரக்குறைவாக பேசிய அமைச்சரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பதோடு, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.