உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்தசாமியார் உருவபொம்மையை எரித்துதி.மு.க. இளைஞர் அணி போராட்டம்

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த சாமியார் உருவபொம்மையை எரித்து தி.மு.க. இளைஞர் அணி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-05 18:45 GMT


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த உத்தரபிரதேச சாமியாரின் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடியில் தி.மு.க. இளைஞர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு

தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துகள் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமகன்ச ஆச்சாரியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்து உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூத்துக்குடியில் நடந்த பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், சனாதனம் பற்றி பேசியதற்காக உத்தரபிரதேசத்தில் ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு விலை வைத்து இருக்கிறார். யார் என்னுடைய தலையை சீவி கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு ரூ.10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு இருந்தால் நானே சீவிக்கொள்வேன். இதேபோன்று கலைஞரின் தலையை சீவினால் ரூ.1 கோடி பரிசு தருவேன் என்று ஒரு சாமியார் கூறினார். அதற்கு கலைஞர் என் தலையை என்னாலே சீவ முடியாது. இன்னொருத்தர் வந்து எப்படி சீவப்போகிறார் என்று கூறினார். அப்படிப்பட்ட கலைஞர் வழியில் வந்தவன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்தார்.

உருவபொம்மை எரிப்பு

இந்த நிலையில் உத்தரபிரதேச சாமியாரை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட மாணவர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்