பழிக்கு பழியாக இரண்டு வாலிபர்கள் வெட்டி படுகொலை - 5 பேர் கைது
தாம்பரம் அருகே இரண்டு வாலிபர்கள் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ரவுடி தேவேந்திரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளிகளான சுகன் என்ற சுரேந்திரன், விக்கி என்கின்ற விக்னேஷ், புளி மூட்டை என்கின்ற சதீஷ், சுதாகர், அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இவர்கள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில் தேவேந்திரன் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் மணிமங்கலம் போலீஸ் நிலையம் அருகே சுகன் என்கின்ற சுரேந்தர் மற்றும் விக்கி என்கின்ற விக்னேஷ் இருவரையும் மர்ம கும்பல் சிலர் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆய்தங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினர்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசிக்கு தகவல் அளித்தனர். மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தசம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் பழிவாங்கும் நோகத்தோடு தேவேந்திரன் கூட்டாளிகள் சுரேந்தரையும் விக்னேஷையும் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.