அரிஸ்டோ மேம்பாலத்தில் இன்று முதல் இருவழிப்பாதை தொடக்கம்

போக்குவரத்து இடையூறை தவிர்க்க இன்று (புதன்கிழமை) முதல் அரிஸ்டோ மேம்பாலத்தில் இருவழிப்பாதை தொடங்கப்பட உள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-04 20:13 GMT

போக்குவரத்து இடையூறை தவிர்க்க இன்று (புதன்கிழமை) முதல் அரிஸ்டோ மேம்பாலத்தில் இருவழிப்பாதை தொடங்கப்பட உள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

அரிஸ்டோ மேம்பாலம்

திருச்சி மாநகரில் ஜங்ஷன் பகுதியில் மன்னார்புரம், கிராப்பட்டி (மதுரை சாலைகள்), கருமண்டபம் (திண்டுக்கல் சாலை), மத்திய பஸ் நிலையம், ரெயில்வே ஜங்ஷன் பகுதிகளை இணைக்கும் வகையில் அரிஸ்டோ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பல வருட இழுபறிக்கு பிறகு பாலப்பணிகள் முழுமையடைந்து கடந்த மே மாதம் 29-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இந்த பாலம் வாகனங்கள் ஏறவோ அல்லது இறங்குவோ என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஒரு வழிப்பாதையாகவே பயன்பாட்டில் உள்ளது. இதனால் இந்த பாலம் கட்டியதன் நோக்கமே வீணாகி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், இந்த பாலத்தில் இரு வழிப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்த பாலத்தில் இரு வழிப்பாதையாக மாற்ற ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இருவழிப்பாதை அறிமுகம்

இந்தநிலையில் கடந்த வாரம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா இந்த பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, மத்திய பஸ்நிலையத்திலிருந்து இரு வழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் இருவழிப்பாதை அறிமுகம் செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். அதன்படி, அரிஸ்டோ மேம்பாலத்தில் மாற்றப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறை விவரம் வருமாறு:-

லாரிகள், கனரக வாகனங்களுக்கு தடை

மத்திய பஸ்நிலைய பகுதியிலும், திண்டுக்கல் சாலையிலும் பாலத்தில் இருந்து கீழே இறங்க மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் மன்னார்புரம் பகுதியில் இருந்து தற்போது பாலத்தின் மேலே செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இந்த 3 பாதைகளிலும் இன்று முதல் பாலத்தின் இருபுறமும் செல்லலாம். அதே நேரம் பாலத்தில் இருந்து ரெயில்வே ஜங்ஷன் பகுதியை நோக்கி தற்போது கீழே இறங்கவும், எடமலைப்பட்டி புதூர் (மதுரை சாலை) பகுதியில் பாலத்தின் மேலே செல்லவும் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இனியும் அதே நிலை தொடரும்.

2, 3, 4 சக்கர வாகனங்கள் (இலகுரக வாகனம் மட்டும்) மற்றும் பஸ்கள் ஆகியவை மட்டுமே இந்த பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதே நேரம், திண்டுக்கல் சாலை மார்க்கத்திலிருந்தும், மத்திய பஸ்நிலையம் மார்க்கத்திலிருந்தும், எடமலைபட்டிபுதூர் செல்லும் வாகனஓட்டிகள் பாலத்தின் மேல் ஏறி செல்ல அனுமதியில்லை. வாகனஓட்டிகள் மேம்பாலத்தில் 30 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது.

கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இருவழிபாதையாக பயன்பாட்டில் உள்ள மேம்பால சாலையின் நடுவில், தொடக்கத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், அதன் பின்னர் பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் திசை காட்டும் வழிகாட்டி பலகை மற்றும் மிளிரும் எல்.இ.டி விளக்குகள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் டிஜிட்டல் பலகை ஆகியவை பாலத்தில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் பாலத்தில் 4 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாலத்தில் போக்குவரத்து போலீசார் தினமும் சுழற்சி முறையில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் மேலே 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து விழிப்புடன் மேம்பாலத்தில் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்