சென்னையில் 176 கண்காட்சி அரங்குகளுடன் வேளாண் வணிக திருவிழா

176 கண்காட்சி அரங்குகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் வேளாண் வணிக திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, பண்ருட்டி விவசாயிக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு தொகை வழங்கினார்.

Update: 2023-07-09 00:26 GMT

வேளாண் வணிக திருவிழா

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழா-2023 நேற்று நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வேளாண் வணிக திருவிழாவில் 176 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 86 அரங்குகளில் 188 விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், நபார்டு வங்கி, தொழில் முனைவோர்கள், பிற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், வங்கிகள் போன்ற பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

இந்த அரங்குகளில் சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பனை சார்ந்த பொருட்கள், நறுமண பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள், சிறு தானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட தின்பண்டங்கள், உடனடியாக சமைக்கும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விளைபொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருதை" புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், ஈரோடு - கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், "வர்த்தகத்தில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான விருது" கடலூர் மாவட்டம், மங்களுர் தானியப் பயிர்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், சேலம் - வீரபாண்டி களஞ்சிய ஜீவிதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும், தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

கருத்தரங்கம்

தொடர்ந்து, 2022-2023-ம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ம.ராமகிருஷ்ணனுக்கு விருதும், 2 லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகையும் வழங்கப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் குறித்த விழிப்புணர்வையும், தொழில் வாய்ப்புகள் குறித்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தகவல்களை பெறுவதற்காக துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு கருத்தரங்கம் இன்றும் நடைபெற உள்ளன.

வேளாண் வணிக திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறுவடைக்கு பின் மேலாண்மை மற்றும் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புகள், வெற்றி பெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்து வந்த பாதை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகளும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் பொருட்களின் விற்பனையை எளிதாக்கும் வகையில், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது. இவ்வேளாண் வணிக திருவிழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

பங்கேற்பு

விழாவில் சுதர்சனம் எம்.எல்.ஏ., சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ் குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் ஆர்.நந்தகோபால், வேளாண்மை ஆணையர் எல்.சுப்பிரமணியன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் ச.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் ஆர்.பிருந்தா தேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய வேளாண்மை வணிக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்