லஞ்ச ஒழிப்பு போலீசார் போல் நடித்து ரூ.2.85 லட்சத்தை பறித்து சென்ற 2 பேர் கைது

திருமயம் அருகே லஞ்ச ஒழிப்பு போலீசார் போல் நடித்து ரூ.2.85 லட்சத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-24 19:00 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசார்

புதுக்கோட்டை டவுன் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகன் ஞானப்பிரகாசம் (வயது 25). இவர் கடந்த 15-ந் தேதி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2.85 லட்சத்தை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி திருச்சி- காரைக்குடி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருமயம் அருகே உள்ள கொசப்பட்டி கண்மாய் பகுதியில் ஞானபிரகாசம் மோட்டார் சைக்கிளை மறித்த 2 பேர் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஞானபிரகாசம் வைத்திருந்த ரூ.2.85 லட்சத்தை பறிமுதல் செய்துகொண்டு திருமயம் போலீஸ் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை கொடுத்து விட்டு பணத்தை பெற்றுச்செல்லுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

2 பேர் கைது

அதைத்தொடர்ந்து ஞானபிரகாசம் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு சென்று பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த போலீசார் தாங்கள் யாரும் சோதனை நடத்தவில்லை என கூறியுள்ளனர். இதையடுத்து ஞானப்பிரகாசம் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருமயம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரஹ்மான், திருமயம் இன்ஸ்பெக்டர் கவுரி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் ஆலங்குடி அருகே உள்ள கீழபிளாகோட்டை கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் பாலமுருகன் (33), பால ஜோதி மகன் சரவணன் (38) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2.85 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்