மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பம்; காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி பலியானது அம்பலம்

திருத்தணி அருகே மர்மமான முறையில் ஆசிரியர் இறந்த வழக்கில் திருப்பமாக காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி அவர் பலியானது அம்பலமானது.;

Update:2023-10-02 14:49 IST

மர்மச்சாவு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் காலனியை சேர்ந்தவர் சபரிமலை (வயது 47). இவர் கே.ஜி.கண்டிகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் விடுமுறை நாட்களில் தெருக்கூத்து ஆடும் கலைஞராகவும் இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி விடியற்காலை 5 மணியளவில் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற சபரிமலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி விவசாய நிலத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின்மோட்டோருக்கு செல்லும் வயரில் சபரிமலை கால் சிக்கி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மின்வேலியில் சிக்கினார்

பின்னர் தகவல் அறிந்து சென்ற போலீசார் சபரிமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சபரிமலையின் மனைவி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சபரிமலையின் நிலத்திற்கு அருகில் விவசாயம் செய்யும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (52) என்பவர் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க மின் வேலி அமைத்துள்ளார். சம்பவத்தன்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற சபரிமலை அந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சபரிமலை உயிரிழப்புக்கு காரணமான பிச்சமுத்துவை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்