வேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம்

வேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20 பேர் படுகாயம்

Update: 2022-06-10 19:39 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில், திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வேன் தலைகுப்புற கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருமண நிகழ்ச்சிக்காக...

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மகள் திருமணம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள திருப்பாலக்குடி கிராமத்தில் நேற்று நடந்தது.

இந்த திருமணத்திற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 25 பேர் ஒரு வேனில் இரவு ஒரு மணியளவில் புறப்பட்டு திருப்பாலக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

வேன் தலைகுப்புற கவிழ்ந்தது

நேற்று காலை இந்த வேன் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பாலக்குடி செல்வதற்கான வழியை கூகுள் மேப்பில் பார்ப்பதற்காக அங்கு உள்ள காளி கோவில் அருகே வேனை டிரைவர் ஓரமாக நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தின்போது வேனில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர்.

20 பேர் படுகாயம்

சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் அங்கு ஓடிவந்து வேனுக்குள் சிக்கி தவித்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் வேனின் கண்ணாடி ஷட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் வேனின் கண்ணாடியை உடைத்து வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். மொத்தம் 25 பேர் வேனில் வந்த நிலையில் 5 பேர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். அனைவரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்