மழையால் வாகனம் பழுதடைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்: டி.வி.எஸ். நிறுவனத்தின் குட் நியூஸ்

மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் இரு சக்கர வாகனங்களும் கார்களும் அதிக அளவில் சேதமடைந்துள்ளன.

Update: 2023-12-08 08:37 GMT

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளித்தது. மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் இப்போது இயல்பு நிலை மெல்ல மெல்லத் திரும்பத் தொடங்கியுள்ளது. ஆனால் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்களும் கார்களும் அதிகமான அளவில் சேதமடைந்துள்ளன. இதற்காக வாகன உரிமையாளர்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில் டி.வி.எஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு வேலைக்கான கூலி எதுவும் இல்லாமல் இலவசமாக வாகனங்கள் பழுது பார்த்து தரப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகையானது இன்று முதல் 18 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் முழ்கி இருக்கும் வாகனங்களின் என்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும் வசதிகளையும் செய்திருப்பதாக டி.வி.எஸ் நிறுவனம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்