பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திரு.வி.க. பூங்காவை செப்டம்பரில் திறக்க திட்டம்

திரு.வி.க. பூங்காவை வருகிற செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறினார்.;

Update:2022-06-15 04:28 IST

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லியிலிருந்து சாலிகிராமம் வரையில் நடந்து வரும் பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பூந்தமல்லி அடுத்த கோளப்பஞ்சேரில் சிமெண்டு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆய்வகத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தயார் நிலையில் 111 தூண்கள்

பின்னர், மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிருபர்களிடம் கூறியதாவது:-

பூந்தமல்லி புறவழிச்சாலை, காட்டுப்பாக்கம் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. குமணன்சாவடி சந்திப்பிலிருந்து கரையான்சாவடி வரையிலான 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பணி நடக்கிறது. காட்டுப்பாக்கம் பகுதியில் ராட்சத எந்திரம் மூலம் உயர்மட்ட தூண்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி முதல் போரூர் வரை 7.94 கிலோ மீட்டர் தூரம் 4-வது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சென்று வருவதற்கான பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 111 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் 342 ராட்சத தூண்கள் அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான இப்பணிகள் அனைத்தும் ரூ.1,147 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூர் மெட்ரோ

சுரங்கப் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் பூமிக்கடியில் டெலிபோன் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், மின்சார ஒயர்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை உள்ளன. அவற்றை மாற்றுப்பாதையில் அப்புறப்படுத்திவிட்டு பணிகள் செய்வதால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. ஆற்காடு ரோடு போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக பணிகள் நடக்கும் பகுதியில் சாலைகளை அகலப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. ஷெனாய் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள திரு.வி.க. பூங்காவை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இந்தப்பணிகள் நிறைவு செய்து வருகிற செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்காவை திறக்க திட்டமிட்டு உள்ளோம்.

விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம்

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைப்பது தொடர்பாக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல், மெரினா கடற்கரையில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக தற்காலிகமாக காந்தி சிலை அப்புறப்படுத்திவிட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் சிலையை இருந்த இடத்தில் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருப்பது போன்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனமும் புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகம் சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் அமைப்பது, மெட்ரோ ரெயில் தூண்களில் அழகுக்காக பூச்செடிகள் அமைப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது. அதேபோல், மயிலாப்பூரிலும் 3 அடுக்கு ரெயில் நிலையம் அமைப்பதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் நிறுவன இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), டி.அர்ச்சுனன் (திட்டங்கள்), டாக்டர் பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), தலைமை பொதுமேலாளர்கள் எஸ்.அசோக்குமார் (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மக்கள் தொடர்பு இணை-இயக்குனர் கிரிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்