தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்முதன் முறையாக கிரீன் அமோனியா இறக்குமதி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்முதன் முறையாக கிரீன் அமோனியா இறக்குமதி செய்யப்பட்டது.;
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் முதன்முறையாக கிரீன் அமோனியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கிரீன் அமோனியா
தூத்துக்குடியை சேர்ந்த தனியார் உரம் தயாரிப்பு நிறுவனம் சோடா ஆஷ் தயாரித்து வருகிறது. இந்த சோடா ஆஷ் தயாரிக்க வழக்கமாக கிரே அமோனியா பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் பசுமை திட்ட முயற்சியாக கிரீன் அமோனியா மூலம் சோடா ஆஷ் தயாரிக்க தொடங்கி உள்ளது. இதனை தொடர்ந்து எகிப்து நாட்டில் இருந்து கிரீன் அமோனியாவை இறக்குமதி செய்துள்ளது. அதன்படி எகிப்து டாமிட்டா துறைமுகத்தில் இருந்து 20 அடி நீளம் கொண்ட சரக்கு பெட்டகங்களில் 37.4 டன் கிரீன் அமோனியா முதன் முறையாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் கிரீன் அமோனியா தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரம் மெட்ரிக் டன் கிரீன் அமோனியாவை அந்த நிறுவனம் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடந்த 24-ந் தேதி ஒரே நாளில் 2 லட்சத்து ஆயிரத்து 204 டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 642 டன் சரக்குகளை கையாண்டு இருந்தது. இதில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 528 டன் சரக்கு பெட்டகம், 35 ஆயிரத்து 18 டன் அனல்மின் நிலக்கரி, 27 ஆயிரத்து 233 டன் தொழிலக நிலக்கரி, 12 ஆயிரத்து 868 டன் சுண்ணாம்புக்கல், 10 ஆயிரத்து 930 டன் கந்தக அமிலம், 11 ஆயிரத்து 627 டன் இதர சரக்குகளை கையாண்டுள்ளது.
பாராட்டு
இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் (பொறுப்பு) பிமல்குமார் ஜா கூறுகையில், பசுமை துறைமுக திட்டங்களை செயல்படுத்துவதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முன்னோடி துறைமுகமாக திகழ்ந்து வருகிறது. துறைமுக செயல்பாடுகளில் கார்பன் வெளியேற்றத்தை குறைத்து பசுமை உற்பத்தியை அதிகரிப்பதற்கு துறைமுக வர்த்தக கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்கள் அனைவரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பசுமை திட்ட முயற்சியாக தூத்துக்குடியை சேர்ந்த தனியார் நிறுவனம் கிரீன் அமோனியா இறக்குமதி செய்து இருப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.