தூத்துக்குடி என்.டி.பி.எல்.அனல்மின்நிலைய தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய தொழிலாளர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-16 18:45 GMT

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 2 மின்உற்பத்தி எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறைந்த அளவில் சூப்பிரவைசர் உள்ளிட்ட பணிகளில் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் என்.டி.பி.எல் நிர்வாகத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் வழங்குவது போன்று என்.டி.பி.எல் அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4-வது நாளாக..

நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இந்தநிலையில் நேற்று மதியம் அனல்மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரதிநிதிகளுடன் மதுரை மண்டல தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் என்.டி.பி.எல் அனல்மின்நிலைய ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.

அதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலைநிறுத்தம் செய்து வருகிறீர்கள். கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். மேலும் இது வேலைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கும் வழிவகுக்கும். ஆகையால் அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இது தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

600 மெகாவாட் மின்உற்பத்தி

போராட்டத்தை தொடர்ந்து அனல்மின்நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 2 நாட்களாக குறைந்தபட்ச மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் மின்சார உற்பத்தி அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று மாலையில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்