தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்ரூ.25 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் பரிசோதனை கருவி:அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் பரிசோதனை கருவியை புதன்கிழமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் பரிசோனை செய்யும் மேமோகிராம் கருவியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
மேமோகிராம் கருவி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நுண்கதிர் துறைக்கு ரூ.30 லட்சம் செலவில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யும் 'மேமோகிராம்' கருவி மற்றும் 'மேமோகிராம் பிலீம் ரீடர்' எந்திரம் ஆகியவை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜி.சிவக்குமார் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் வி.கலைவாணி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் ஜே.சைலஸ் ஜெயமணி, துணை கண்காணிப்பாளர் பி.குமரன், நுண்கதிர் துறை தலைவர் இ.புளோரா ஜூனைட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 'மேமோகிராம்' கருவி மற்றும் 'மேமோகிராம் பிலீம் ரீடர் ' எந்திரத்தை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
முன்னதாக அரசு செவிலியர் பள்ளி விடுதியில் தனியார் நிறுவனத்தின் சமுதாய பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் பேசும்போது, செவிலியர் பணி என்பது அர்ப்பணிப்பு நிறைந்ததாகும். எல்லோரோலும் இந்த பணியை செய்ய முடியாது. மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக செவிலியர்களை தான் மக்கள் தெய்வமாக பார்க்கின்றனர். உங்களுக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது. பல செவிலியர்கள் தங்கள் உடநலத்தை பற்றி கவலைப்படுவதில்லை. செவிலியர்கள் தங்களது உடல்நலனினும் அக்கறை செலுத்த வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நோயாளிகளை நல்ல முறையில் கவனித்து கொள்ள முடியும். செவிலியர் மாணவிகள் மூத்த செவிலியர்களின் அனுபவ அறிவை பெற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் சிறந்த செவிலியர்களாக வருவதற்கு அது உதவும்.
மேலும், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைக்க செவிலியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகிற 13-ந் தேதி தூத்துக்குடி வர உள்ளார். அப்போது இங்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்து அவரிடம் கேட்டு பெறலாம். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மேமோகிராம் கருவி அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை எளிதாக கண்டறிய முடியும். எனவே, மார்பக புற்றுநோய் குறித்து சந்தேகம் எழும் பெண்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த வசதியை தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார், அரசு செவிலியர் பள்ளி முதல்வர் ராஜ்இந்திரா, எலும்பு அறுவை சிகிச்சை நிபுனர் பாவலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.