தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; எடப்பாடி பழனிசாமி தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், அதன் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்தி நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.
இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மவுனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்று பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்தப் போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள்"
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.