தூத்துக்குடி: இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் - போலீஸ் குவிப்பு
திருச்செந்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன , மேலும் 5 போலீசார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே கரம்பவிளையில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 9-ந் தேதி நடைப்பெற்றது. அதற்கு மறுநாள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்நிலையில் கரம்பவிளை கோவிலில் நேற்று இரவு அங்குள்ள சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு மற்றொரு தரப்பினர் சென்றுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த ஆறுமுகநேரி போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கரம்பவிளையை சேர்ந்த மணிகண்டன் ( வயது 22) என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த அன்புசெல்வம்(10) ,தோப்பூரை சேர்ந்த காட்டுராஜா
ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் இந்த மோதலில் போலீஸ் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி, போலீசாரின் மோட்டார் சைக்கிள் உள்பட சுமார் 10 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், வீடுகள் போன்றவை சேதமடைந்தன. இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் கரம்பவிளை மற்றும் நகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பேரை திருச்செந்தூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.