மெட்ரோ ரெயில் சேவைக்காக அடையாறு ஆற்றின் கீழ் செப்டம்பரில் சுரங்கம் தோண்டும் பணி- அதிகாரிகள் தகவல்

அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் செப்டம்பரில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-08-06 08:25 GMT

நம் நாட்டில் கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அமதாபாத், ஜெய்ப்பூர், குருகிராம், மும்பை, நொய்டா, கொச்சி, லக்னோ, நாக்பூர், கான்பூர் மற்றும் புனே ஆகிய 15 நகரங்களில் சுமார் 600 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இந்த நகரங்களில் பூமிக்கு மேலே உயர்த்தப்பட்ட பாதையிலும், பூமிக்கு அடியில் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. இதில் நாட்டிலேயே முதன் முறையாக கொல்கத்தாவில் கிழக்கு-மேற்கு வழித்தடங்களை இணைக்கும் வகையில் ஹூக்ளி ஆற்றின் கீழ் நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னையில் முதல் கட்டமாக திருவொற்றியூர் விம்கோநகர் முதல் விமானநிலையம் வரை நீல வழித்தடத்திலும், சென்டிரல் எம்.ஜி.ஆர். மெட்ரோ முதல் பரங்கிமலை வரை பசுமை வழித்தடம் உள்பட 2 வழித்தடத்திலும் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. முதல்கட்ட பணியின் போது கொல்கத்தாவில் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்தது போல், சென்னையில் சென்டிரல் எம்.ஜி.ஆர். மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் கூவம் ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னையில் 2-ம் கட்டமாக மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில் 30, மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 48, மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

இதில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் சென்னையின் வடக்கு, மத்திய, தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக பார்க்கப்படுகிறது. இந்த பாதையின் ஒரு பகுதியாக கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு வரை சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்து, சுரங்கம் தோண்டும் பணியில் 'காவேரி' என்ற சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருகிறது.

தற்போது வரை 121 மீட்டர் சுரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி 1½ முதல் 2 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. 120 மீட்டர் சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்தால் ஆற்றின் கரை பகுதிக்கு வருகிற செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் வந்தடையும். அதற்கு பிறகு சுமார் 400 மீட்டர் நீளம் கொண்ட ஆற்றில் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும். நிலப்பகுதியில் தோண்டியது போல் இல்லாமல், ஆற்றின் கீழ் அதாவது நீர் பகுதியின் கீழ் தோண்டப்படும் சுரங்க எந்திரத்தின் வேகம் சற்று குறைக்கப்படும். இதேபோல் இதே பாதையில் மற்றொரு சுரங்கம் தோண்டும் எந்திரம் வருகிற அக்டோபர் மாதம் பணியை தொடங்க இருக்கிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்