ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது மதுரையில் டி.டி.வி.தினகரன் பேட்டி
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.;
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அதிருப்தி
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான். மருங்காபுரி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்றுள்ளன.
ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக்கூடியது. ஆனால் தி.மு.க. மீது 21 மாதங்களில் கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ளது. பொதுத்தேர்தல் வரும்போது எப்படி அதிருப்தி இருக்குமோ அந்த அளவிற்கு இருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்த வார்த்தை ஜாலங்களைதான் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். இடைத்தேர்தலின் போது இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். சட்டமன்றத் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம்
ஈரோடு இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வாக்காளருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். எனவே இது தவறான முன்மாதிரி தேர்தலாக நடந்திருக்கிறது. ஆட்சி அதிகாரம் அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். சுப்ரீம்கோர்ட்டு இரட்டை இலை வழங்கிவிட்டதால் மேற்கு மண்டலமே எங்களது கோட்டை என்று சொன்னார்கள். தேர்தல் முடிவால் கலகலத்துபோகியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அவர்களும், தி.மு.க.விற்கு இணையாக செலவு செய்தும்கூட வெற்றி பெற இயலவில்லை. அந்த அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
5 ஆண்டுகள் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி நடத்தினார். அடுத்த 4 ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு மோசமாக இருந்தது. இதனால் தி.மு.க.வை நம்பி மக்கள் வாக்களித்தார்கள். வருங்காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க.வை வீழ்த்த போராடுவோம். இதற்கு ஒரு சிலரின் சுயநலம் தடையாக இருக்கலாம். அந்த சுயநலம் உடைத்து எறியப்படும்.
மாேசமான நிலை
துரோகம் இழைக்கப்பட்டதுக்காக தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், துரோகம் செய்தவர் தலைமையில் தற்போது அக்கட்சி உள்ளது. இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பை தரும். 2,500 பேரை வசப்படுத்தி தொண்டர்கள் என் பின்னால் என சொல்கிறார். அவர் உண்மையான தலைவர் இல்லை. ஈரோடு பகுதியை தங்கள் கோட்டை என கூறிவிட்டு ஏன் கோட்டை விட்டார்கள்?. 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இயக்கம் இருப்பதால் இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.வும் இன்னும் பலவீனப்பட்டு மோசமான நிலையை அடையும். எந்த முன்னேற்றமும் ஏற்படாது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.