'எவரெஸ்ட்'ைட தொடும் முயற்சியில்விருதுநகர் முத்தமிழ்ச்செல்வி

‘எவரெஸ்ட்’ைட தொடும் முயற்சியில் விருதுநகர் முத்தமிழ்ச்செல்வி ஈடுபட்டுள்ளார்.

Update: 2023-03-29 19:23 GMT


இலக்கை அடைய நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்போது, இலக்கை அடைந்துவிட்டால் வெற்றியாளர்களாகவும் அதனை தவறவிட்டால் அனுபவம் பெற்றவர்களாகவும் மாறுகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க ஆர்வம் கொண்டு அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார்.

காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் அவர். மூர்த்தி அம்மாள் என்பவருடைய மகள். வயது 33. பி.சி.ஏ. பட்டதாரி. இவரது கணவர் குணசேகரன். இவர் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். முத்தமிழ்ச்செல்வி ஜப்பானிய மொழிபெயர்ப்பாளராக உள்ளார்.

கண்களை கட்டிக்கொண்டு இறங்கினார்

சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட அவர், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகிலேயே மிக உயரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டுவிட வேண்டும் என்பதே இவரது கனவு.

அதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி பயிற்சி மேற்கொண்டார். மகளிர் தினமான கடந்த 8-ந் தேதியன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிறிய மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 53 விநாடிகளில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.

இதே போன்று காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள 5500 அடி உயரம் உள்ள பனிமலை உச்சியையும் தனி பெண்ணாக சென்று முத்தமிழ்ச்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியைப் பெற்றார்.

ஏற்கனவே இவர் குதிரையில் அமர்ந்து 1389 அம்புகளை குறி பார்த்து எய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்.

நடவடிக்கை

இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டராக இருந்த மேகநாத ரெட்டியை சந்தித்து தனது சாதனை பயணத்திற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தார். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள சேவை சங்கங்களையும் தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யக்கோரினார்.

மேகநாத ரெட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக பொறுப்பேற்றவுடன் முத்தமிழ்ச் செல்வியின் சாதனைக்கு அரசு உதவி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

ஊக்கத்தொகை

அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க போகும் தமிழ் பெண்ணான முத்தமிழ்ச்செல்விக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையை அரசு சார்பில் வழங்கி பாராட்டினார்.

தனது பயணம் பற்றி முத்தமிழ்ச்செல்வி 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

நான் வருகிற 2-ந் தேதி சென்னையில் இருந்து இமயமலைக்கு புறப்பட்டு, 5-ந் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனை பயணத்தை தொடங்குகிறேன்.

தமிழக அரசு தந்த ஊக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் ஏறும் எனது சாதனை பயணத்தில் உறுதியாக வெற்றி காண்பேன். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முதல் தமிழ் பெண்ணாக நான் சாதனை படைப்பேன்.

எனது இந்த சாதனை பயணத்திற்கு உதவிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"மாதராய் பிறக்க நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் வாக்கை மெய்ப்பிக்கும் அவரது சாதனை முயற்சி அமைந்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்