ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி.. ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்

ஜாமீனில் வெளியே வந்தவரை கைது செய்ய முயற்சி நடந்ததையடுத்து ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்து கதறி அழுது போலீசாரிடம் இருந்து அந்த பெண் கணவரை மீட்டார்.

Update: 2023-06-24 08:42 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்த்தவர் மோகன் (வயது 32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் மடிக்கணினி மற்றும் செல்போன் திருட்டு போனது.

இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் வந்து இருந்தார்.

ஜெயிலில் இருந்து மோகன் வெளியே வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்க வில்லை.

அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே மற்றொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்றுவதற்காக இழுத்து சென்றனர். இதை பார்த்த மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்ய முடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார். இருப்பினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கற்றி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் பிடித்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கு இருந்தவர்களின் மனதை கனக்க செய்தது. இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்தனர்.

கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் மற்றொரு காரில் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது:-

ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மடிக்கணினி மற்றும் செல்போன்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்துள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்