2 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-06-01 15:55 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாணிக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பிரபா (வயது28). பிரபா நேற்று தனது மகன் ரித்திக் (9), மகள் ரக்‌ஷிதா (7) ஆகியோருடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு குழந்தைகள் மீதும், அவர் மீதும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், அவர்களை தடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பிரபா கூறுகையில், தனது கணவர் மோகனை அவரது குடும்பத்தினர் ஏமாற்றி ஓய்வுபெற்ற பின் வந்த பணத்தை பறித்து கொண்டு தங்களுக்கு சொந்தமான வீட்டை கொடுக்க மறுக்கின்றனர். அத்துடன் பாகப்பிரிவினை செய்யவும் விடாமல் தடுக்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வாழ பிடிக்காமல் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இது காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர் வழங்கும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்