தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து; டாஸ்மாக் ஊழியர் பலி-3 மாடுகள் செத்தன

தொப்பூர் கணவாயில் லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் டாஸ்மாக் ஊழியர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். 3 மாடுகளும் செத்தன.

Update: 2022-08-18 17:17 GMT

நல்லம்பள்ளி:

லாரிகள் மோதி விபத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கொண்டை கடலை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெகன் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கிளீனர் குணா (30) உடன் வந்தார்.

தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த வழியாக எதிரே ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூருக்கு மாடுகள் பாரம் ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மாடு லோடு ஏற்றி வந்த லாரி சாலையோர பாறையின் மீது மோதிநின்றது.

இதில் லாரியில் இருந்த 13 மாடுகளில் 3 மாடுகள் இடிபாடுகளில் சிக்கி இறந்தன. 10 மாடுகள் காயம் அடைந்து எழ முடியாமல் சாலையோரம் கிடந்தன. அதே நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கொண்டை கடலை பார லாரி, சாலையின் எதிர்புற ஓரத்தில் கவிழ்ந்தது. அதே நேரத்தில் அந்த மாட்டு பாரம் ஏற்றி வந்த லாரிக்கு பின்னால் வந்த மொபட் கொண்டை கடலை பார லோடு லாரியின் அடியில் சிக்கி கொண்டது.

டாஸ்மாக் ஊழியர் பலி

இந்த விபத்தில் மொபட்டில் வந்த சேலம் மாவட்டம் வாழதாசம்பட்டி பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் செல்வராசு (48) என்பவர் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் இதில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த கால்நடை பார லாரி டிரைவர் இளவரசன் (30) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த கால்நடை வியாபாரிகள் மேகநாதன் (40), ரவி (56) மற்றும் கடலை பார லாரி டிரைவர் ஜெகன், கிளீனர் குணா ஆகிய 5 பேர் படுகாயம்அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் இணைந்து காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கடலை பார லாரி டிரைவர் ஜெகன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.

சொந்த வேலை...

மொபட்டில் வந்து உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் செல்வராசுவின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியான டாஸ்மாக் ஊழியர் மேட்டூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று சொந்த வேலையாக தனது மொபட் மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்றபோது லாரிகள் மோதிய விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் கால் முறிவு உள்பட காயங்களுடன் சிக்கி தவித்து கொண்டிருந்த 10 மாடுகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

குறிப்பாக நேற்று தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணி செய்வதற்காக, கட்டமேட்டில் இருந்து தொப்பூர் போலீஸ் குடியிருப்பு வரையிலும் சேலம்-தர்மபுரி சாலை ஒருவழிப்பாதையில் வாகனங்கள் சென்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான இரு லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்