கரும்புகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

கூடலூர் பகுதியில் கரும்புகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.;

Update:2023-06-22 00:30 IST

கரும்பு சாகுபடி

முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இருபோக நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை குறைந்து வருவதால் நெல் சாகுபடி பரப்பு சுருங்கி வருகிறது.

அதில் கூடலூர் பகுதியில் நெல் சாகுபடியின்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையினாலும், அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாட்டாலும் இந்தப் பகுதியில் பலர் ஆலைக்கரும்பு சாகுபடிக்கு மாறி வருகின்றனர். இதனால் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு

கூடலூர் பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் கரும்பு அமோக விளைச்சல் அடைந்து உள்ளது. தற்போது இந்த கரும்புகளை ஆலைகளுக்கு கொண்டு செல்வதற்காக அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கரும்புகளை அதிக பாரத்துடன் ஏற்றிக்கொண்டு லாரிகள் கூடலூர் பகுதியில் செல்கின்றன. அந்த லாரிகளால் அந்த பகுதியில் உள்ள மின்வயர்கள், கேபிள் டி.வி. வயர்கள் அறுந்து விழுகின்றன. மேலும் லாரிகள் அதிகம் செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் நகர் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே கூடலூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்