சுங்குவார்சத்திரம் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் சாவு - கணவர் கண்எதிரே பரிதாபம்

சுங்குவார்சத்திரம் அருகே மோட்டோர் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-03-21 13:45 IST

சென்னை படாளம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 45). திருவண்ணாமலையில் வசித்து வந்த ஜெயந்தியின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பார்க்க நேற்று ஜானகிராமன், ஜெயந்தி இருவரும் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை சென்று விட்டு வீட்டுக்கு திருப்பி வந்து கொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் அருகே செல்லும்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஜெயந்தி, கணவர் கண் எதிரேயே உடல் நசுக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் அதிர்ஷ்டவசமாக ஜானகிராமன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ஜெயந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்