திருவந்திபுரம்தேவநாதசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாநாளை மறுநாள் நடக்கிறது
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
நெல்லிக்குப்பம்,
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவில் 8-ம் நாளான நேற்று பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதில் உற்சவர் தேவநாதசாமி மோகன அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதனை தொடர்ந்து அன்றைய தினம் பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.
சொர்க்கவாசல் திறப்பு
இதையடுத்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து காலை 5.30 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெறும். இதை தொடர்ந்து அன்றைய தினம் இரவு ராப்பத்து உற்சவம் தொடங்க உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.