திருடிய பசுமாட்டை வெட்டி இறைச்சியாக விற்க முயற்சி
விக்கிரவாண்டி அருகே திருடிய பசுமாட்டை வெட்டி இறைச்சியாக விற்க முயற்சி 2 பேர் கைது
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையை சேர்ந்தவர் நாராயணன்(வயது 59). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது நிலத்தில் 7 பசுமாடுகளை கட்டிப்போட்டு விட்டு தூங்கினார். இரவு 9.30 மணியளவில் மாடுகளை பார்த்த போது ஒரு பசு மாட்டை காணாமல் அதிா்ச்சி அடைந்த நாராயணன் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது தனது நிலத்தின் அருகில் உள்ள காட்டில் மர்ம நபர்கள் 2 பேர் பசுமாட்டை இறைச்சிக்காக துண்டு துண்டுகளாக வெட்டி போட்டுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த நாராயணன் கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் மொபட்டில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பின்னர் இது பற்றி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாராயணனுக்கு சொந்தமான பசுமாட்டை திருடி வெட்டி இறைச்சிக்காக விற்க முயன்ற மர்ம நபர்கள் நேமூரை சேர்ந்த துரை(41), செஞ்சி ஈச்சூர் அருகே உள்ள அம்மான்குளத்துமேட்டை சேர்ந்த சீட்கவர் வியாபாரம் செய்யும் சுரேஷ்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.