திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள்

திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது.

Update: 2022-07-14 19:24 GMT

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 வருவாய் மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 240 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா ஒரு மாணவர் அணி, மகளிர் அணி, என 10 மகளிர் அணியும், 10 மாணவர் அணியும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிகளை தமிழ்நாடு கூடைப்பந்து கழக மாநில செயலாளர் அஜிஸ் தொடங்கி வைத்தார். இதில் போட்டிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ஹரீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்கும் அணிகள் ஒவ்வொன்றும் 4 அணிகளுடன் மோதும் வகையில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த லீக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடக்கின்றன. இதில் வெற்றிபெறும் 8 அணிகள் கால் இறுதிச்சுற்றிலும், 4 அணிகள் அரை இறுதியிலும் நுழைகின்றன. கால்இறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்கள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகின்றன. என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இறுதிப்போட்டிகள் 17-ந்தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்