திருச்சி: ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் வசந்த உற்சவம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவம் இன்று சிறப்பாக தொடங்கியது.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் வசந்த உற்சவம் இன்று தொடங்கியது. இந்த உற்சவம் வரும் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வசந்த உற்சவத்தின் முதல் நாளில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவ மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தனர். அங்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜோட உபச்சார தீபாரதனை நடைபெற்றது.
பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு உற்சவ மண்டபத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தனர். வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.