பாக்கம் காப்புக்காட்டில் தவில் குச்சி தயாரிக்க மரம் வெட்டிய 2 பேருக்கு அபராதம் வனத்துறையினர் நடவடிக்கை
பாக்கம் காப்புக்காட்டில் தவில் குச்சி தயாரிக்க மரம் வெட்டிய 2 பேருக்கு அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் பாக்கம் காப்புக்காடு பகுதியில் இருவாச்சி மரங்கள் அதிகம் உள்ளன. தமிழகத்திலேயே இங்குதான் இந்த வகை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த மரத்தை கொண்டு தவில் இசைக்க பயன்படும் குச்சிகள் தயாரிக்கப்படுகிறது.
இங்குள்ள காப்புக்காட்டில் இருக்கும் இருவாச்சி மரக்குச்சிகளை சிலர் சட்டவிரோதமாக வெட்டி தவில் மேள வாசிப்பு குச்சி தயாரித்து விற்பனை செய்வதற்காக இந்த மரங்களை வெட்டி கடத்திச்செல்வதாக மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வனச்சரக அலுவலர் பாபு, கண்டாச்சிபுரம் வனவர் விவேக்கரன், பாக்கம் வனக்காப்பாளர் கார்த்திகேயன், அடுக்கம் வனக்காவலர் அருண்குமார் ஆகியோர் நேற்று பாக்கம் காப்புக்காட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ராமராஜன்பேட்டை மொனப்பா ஏரி அருகில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்ததில் அதற்குள் இருவாச்சி மரக்குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் இருவரும் பாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 59), செஞ்சியை சேர்ந்த முனியப்பன் (40) என்பதும் தவில் குச்சி தயாரிப்பதற்காக இருவாச்சி மரங்களை வெட்டி கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இருவாச்சி மரக்குச்சிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சேகர், முனியப்பன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு மீண்டும் காப்புக்காட்டுக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.