திருப்பூர்
திருப்பூர் லட்சுமி நகர் மெயின் ரோட்டில் ரோட்டோரம் நின்ற 2 மரங்கள் வெட்டப்பட்டு இருந்தன. 15 ஆண்டுகளாக நின்ற அந்த மரங்கள் வெட்டப்பட்டு மரக்கட்டைகளை சிலர் வாகனத்தில் ஏற்ற முயன்றதாக தெரிகிறது. இதை கவனித்த அப்பகுதியில் குடியிருந்தவர்கள் திரண்டனர். கட்டைகளை ஏற்ற முயன்றவர்களை பிடிப்பதற்குள் அவர்கள் தப்பிவிட்டனர். உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மரம் வெட்டியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெட்டப்பட்ட மரக்கட்டைகளை பறிமுதல் செய்து திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாசில்தார், ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை செய்துள்ளார்.