10,358 இடங்களில் மரக்கிளைகள் அகற்றம்

மழைக்காலத்தில் பாதிப்புகளை தவிர்க்க 10,358 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கூறினார்.

Update: 2023-07-31 20:04 GMT

தஞ்சாவூர்;

மழைக்காலத்தில் பாதிப்புகளை தவிர்க்க 10,358 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கூறினார்.

பராமரிப்பு பணிகள்

தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் முதல் கட்டமாக கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 10,358 இடங்களில் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

மின்கம்பங்கள் மாற்றம்

285 இடங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 173 மின்மாற்றி கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றும் 215 பழுதான மின்கம்பங்கள் மாற்றப்பட்டும், 126 இடங்களில் இடைசெருகல் மின்கம்பங்களும் நிறுவப்பட்டன.இதனை தொடர்ந்து 2-ம் கட்ட பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் காரணமாக தேவைப்படும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். அவ்வாறு மின் நிறுத்தம் செய்வது தொடர்பான குறுந்தகவல்கள் பெறுவதற்கு மின் நுகர்வோர்கள் தங்களது சரியான தொலைபேசி எண்ணை தாங்கள் உபயோகப்படுத்தும் மின் இணைப்புடன் இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்