கடல் அலையில் சிக்கி பலியான 3 மாணவர்கள் உடல் கரை ஒதுங்கின
உவரி அருகே கடல் அலையில் சிக்கி பலியான 3 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. அவர்களின் உடல்களைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
திசையன்விளை:
உவரி அருகே கடல் அலையில் சிக்கி பலியான 3 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. அவர்களின் உடல்களைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பள்ளிக்கூட மாணவர்கள்
நெல்லை மாவட்டம் உவரி அருகே நவ்வலடி ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர்கள் இசக்கிமுத்து மகன் ராகுல் (14), மகாலிங்கம் மகன் முகேஷ் (13). நவ்வலடி ரேஷன் கடை தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆகாஷ் (14). நவ்வலடி நடு தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (14).
நண்பர்களான இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். ராகுல், ஆகாஷ், பிரகாஷ் ஆகியோர் 9-ம் வகுப்பும், முகேஷ் 8-ம் வகுப்பும் படித்தார்கள்.
கடல் அலையில் சிக்கி...
சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று முன்தினம் மாலையில் இவர்கள் 4 பேரும் நவ்வலடி கடலில் குளிக்க சென்றனர். ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் கடலில் இறங்கி குளித்தனர். பிரகாஷ் கடலில் இறங்காமல் கரையில் நின்று கொண்டிருந்தான்.
அப்போது கடலில் குளித்த 3 மாணவர்களில் ஒருவர் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். உடனே அங்கு குளித்து கொண்டிருந்த சக மாணவர்கள் 2 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், 3 மாணவர்களும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டனர்.
தேடும் பணி
இதை பார்த்த பிரகாஷ் பயந்துபோய் வீட்டுக்கு சென்று விட்டான். ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகியோர் நீண்ட நேரமாகியும் வீடுகளுக்கு திரும்பாததால் அவர்களை பெற்றோர், உறவினர்கள் தேடினர். அப்போது நவ்வலடி கடற்கரையில் மாணவர்களின் உடைகள், செருப்புகள் கிடந்ததால், அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.
மேலும், மாணவர் பிரகாசும் கடலில் குளிக்க சென்ற தனது நண்பர்கள் 3 பேரும் அலையில் சிக்கி மூழ்கியதாக கூறினார். இதுகுறித்து உவரி கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும், திசையன்விளை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய இந்த தேடுதல் பணி நடந்தது. ஆனால், அவர்கள் 3 பேரும் கிடைக்கவில்லை.
உடல்கள் கரை ஒதுங்கின
நேற்று அதிகாலையில் நவ்வலடி கோடாவிளை கடற்கரையில் ராகுல், ஆகாஷ் ஆகியோரது உடல்கள் கரை ஒதுங்கின. பின்னர் காலையில் நவ்வலடி கொண்டல் கடற்கரையில் முகேஷின் உடல் கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இறந்த மாணவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரேத பரிசோதனை முடிந்து மாணவர்கள் 3 பேரின் உடல்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரைக்கு வந்தது. அங்கு 3 பேரின் உடல்களும் ஒரே குழியில் புதைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
உவரி அருகே கடல் அலையில் சிக்கி 3 மாணவர்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.