திருப்பதி, சபரிமலை கோவில்களை போல் வெளிப்படை தன்மை வேண்டும்: கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் நடத்தியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை -மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

திருப்பதி, சபரிமலை கோவில்களை போல் வெளிப்படை தன்மை வேண்டும் என்றும், கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் நடத்தியவர்கள் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

Update: 2023-01-31 20:19 GMT


திருப்பதி, சபரிமலை கோவில்களை போல் வெளிப்படை தன்மை வேண்டும் என்றும், கோவில்கள் பெயரில் போலி இணையதளங்கள் நடத்தியவர்கள் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

போலி இணையதளங்கள்

ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்க்கண்டன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் பெயரில் போலி இணையதளங்கள் தொடங்கி, பணவசூல் செய்து மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களின் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. பின்னர் இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

முடக்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கோவில்களின் பெயரில் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோத, இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இணையதளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயை, சைபர் கிரைம் போலீஸ் மூலமாக கண்டறிந்து கணக்கிட்டு, அவற்றை பறிமுதல் செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, கோவில்களின் இணையதள முகவரிகளை தெரியப்படுத்தி, போலி இணையதள முகவரிகள் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை முடக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களில் மட்டும் பூஜைகள், நன்கொடை வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி இணையதளங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

தனி போன் எண்

போலி இணையதளங்கள் குறித்து புகார் அளிக்க தனி அலுவலரை நியமிப்பதோடு, அதற்காக தனி தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும். போலி இணையதளங்களை நடத்தியவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைபர் கிரைம் போலீசார் இது போன்ற புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்து உரிய விசாரணை செய்ய வேண்டும். கோவில்களில் போதிய உண்டியல்களை வைத்து அவற்றில் மட்டும் காணிக்கைகளை செலுத்த அறிவுறுத்த வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் மூலம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.

ரசீது

கோவில் சேவைகளுக்கான கட்டணம் கோவில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் என்றால் உரிய ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும். அர்ச்சகர்கள், போட்டோகிராபர்கள், வழிகாட்டிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். இதனால் 3-வது நபர்கள் கோவிலுக்குள் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும்.

இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலுக்குள் நடைபெறும் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அதனை கண்காணித்து சட்டவிரோதங்கள் இருப்பின், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி-சபரிமலை

திருப்பதி, சபரிமலை கோவில்களைப் போல தமிழக கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் இந்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கெடுவையும் நீதிபதிகள் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்