சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் 'கருணை கொலை செய்து விடுங்கள்'- கலெக்டரிடம் திருநங்கைகள் முறையீடு

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடை கொடுத்து சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், திருநங்கைகள் முறையிட்டனர்.

Update: 2022-11-28 20:15 GMT

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடை கொடுத்து சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், திருநங்கைகள் முறையிட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு தஞ்சை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சை அன்னை சத்யாநகர் சுண்ணாம்புகால்வாய் சாலையை சேர்ந்த திருநங்கையான சத்யா தலைமையில் வந்த திருநங்கைகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நீண்ட நாட்களாக தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கடை வேண்டி தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் கடையை வாடகைக்கு கொடுக்கவில்லை. மீண்டும் வாடகைக்கு கடையை கேட்டதற்கு எல்லாரையும் போல் பணம் கட்டினால் காமராஜர் மார்க்கெட்டில் கடை ஒன்று தருவதாக உறுதியளித்தார்.

கருணை கொலை

அதன்படி ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை கட்டினோம். ஆனால் திருநங்கை என்பதால் கடையை தர மறுத்துவிட்டனர். சமுதாயத்தில் பிச்சை எடுத்தும், பாலியல் தொழிலில் செல்லாமல் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்று நினைத்தோம். காமராஜர் மார்க்கெட்டில் கடை கொடுத்து, எங்களுக்கு வழி வகை செய்ய வில்லை என்றால் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பூதலூர் ஒன்றியம் புதுக்கரியாப்பட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சானூரப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள் ஒப்பந்தகாரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பூதலூர் தாலுகா புதுக்குடி வடபாதி கிராம மக்கள் அளித்த மனுவில், வேறு மாவட்டங்களில் சொந்தமாக வீடு இருந்தும் அரசை ஏமாற்றி இலவச வீட்டுமனைபெற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பூர்விகமாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்