மின்மாற்றி கொள்முதல் ஊழல்; சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மின்மாற்றி கொள்முதலில் இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-09-27 06:13 GMT

சென்னை,

மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டிருக்கின்றன. 2021-ம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 2022-ம் ஆண்டில் 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர்(KVA) திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டன. அதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும்தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு ராஜஸ்தான் மாநில அரசு வாங்கியுள்ளது.

மின்மாற்றிகளை வாங்குவதில் திட்டமிட்ட கூட்டுச் சதி நடைபெற்றுள்ளது. ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த ஒப்பந்த ஏல நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட விலையில் சிறிதளவு குறைத்து மின்வாரியத்துக்கு பணத்தை மிச்சப்படுத்தியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.

2021 முதல் 2023 வரை மொத்தம் 10 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் இதேபோன்ற கூட்டுச்சதியும், முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.1,182 கோடிக்கு பல்வேறு திறன் கொண்ட மின்மாற்றிகள் வாங்கப்பட்டதில் ரூ.397 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேடு குறித்து அனைத்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தில் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. ஆனால், அதன் மீது முதற்கட்ட விசாரணையைக் கூட இதுவரை காவல்துறை தொடங்கவில்லை.

மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லகானி, நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர்தான் என்று குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது ஏன்?

மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஊழல் வழக்கில் சிறை சென்று 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான அவரை பெருந்தியாகம் செய்தவர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகிறார். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசு எந்திரமே செயல்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, மின்மாற்றி கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் நியாயம் கிடைக்காது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்."

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்