வால்பாறை
வால்பாறையில் ஒன்றிய அளவிலான 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் பாடங்களை நடத்துவது குறித்து 3 நாட்கள் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும், அதில் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் ஆடல், பாடல், பேச்சு, விளக்க படங்கள், இணைய தளம் மூலமாக எவ்வாறு பாடங்களை நடத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, இந்த பயிற்சி அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும்போது மாணவ-மாணவிகளை செய்து காண்பிக்க செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில்குமார், சுகந்தி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.