திருச்செந்தூர் சென்ற ரெயிலில் பெட்டிகள் குறைப்பால் பயணிகள் அலைமோதல்

பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு நேற்று இயக்கப்பட்ட ரெயிலில் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அங்குமிங்கும் அலைமோதி கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2022-10-29 18:07 GMT


பாலக்காட்டில் இருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு நேற்று இயக்கப்பட்ட ரெயிலில் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்ததால் பயணிகள் அங்குமிங்கும் அலைமோதி கடும் அவதிக்குள்ளாகினர்.

திருச்செந்தூர் ரெயில்

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் வரை பயணிகள் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து உடுமலைக்கு காலை 7.10 மணிக்கு வந்துசெல்லும்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி வருவதால் இந்த ரெயில் வரும்போதே ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். உடுமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஏறும் பயணிகளுக்கு உட்காருவதற்கு போதுமான இடம் கிடைப்பது இல்லை.

பெட்டிகள் குறைப்பு

பழனி, திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களுக்கு சென்ற பிறகு தான் சிலருக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கிறது. அதுவரை பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர். இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு வழக்கமாக இயக்கப்படும். மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக வருவதால் பெட்டிகளின் எண்ணிக்கையை 13 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது கந்தசஷ்டிசூரசம்காரத்திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு 13 பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருச்செந்தூர் சென்ற ரெயிலில் 9 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது. அதனால் ரெயிலில் இடம் பிடிக்க உடுமலை ரெயில் நிலையத்தில் பயணிகள் அங்குமிங்கும் அலைமோதினர். ரெயில்பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்ததால்தான் இந்த அளவிற்கு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குடும்பத்துடன் வந்த பயணிகள் அனைவரும் ரெயிலில் ஏறுவதற்கு பெரிதும் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்