ஓய்வறை இல்லாததால் ரெயில்வே பணியாளர் உயிரிழந்த சோகம் - பணியாளர் நலச்சங்கம் கண்டனம்
ஓய்வறை இல்லாததால் ரெயில்வே பணியாளர் உயிரிழந்ததால் பணியாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்தது.;
தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்க துணை பொது செயலாளர் நவுசாத் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரையில் இருந்து சென்னை உள்பட வடமாநிலங்கள் வரை செல்லும் ரெயில்களில் ஏ.சி.மெக்கானிக்குகள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, கடந்த 22-ந் தேதி மதுரையில் இருந்து புறப்பட்ட சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.12687) கென்னடி (வயது 50) என்ற ஏ.சி.டெக்னீசியன் பணியாற்றினார். இவர் கடந்த 25-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சண்டிகர் ரெயில் நிலையம் சென்றடைந்தார். அதாவது சுமார் 3062 கி.மீ. தூரம் தொடர்ந்து பணியில் இருந்துள்ளார். இந்த ரெயில் (வ.எண்.12688) சண்டிகரில் இருந்து நேற்று காலை புறப்பட்டு புதன்கிழமை மதியம் 1 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இந்தநிலையில், ஏ.சி.டெக்னீசியன் கென்னடி கடந்த 26-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அதாவது, தொடர்ந்து 3 நாட்கள் பணியாற்றும் ஏ.சி. டெக்னீசியன்களுக்கு ரெயில்வே சார்பில் ஓய்வறை கிடையாது. இதனால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி மரணமடைந்துள்ளார். தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்கம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கூட இந்த விவகாரம் குறித்து ரெயில்வே அதிகாரிகளின் கவனத்துக்காக மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் சுவரொட்டி ஒட்டியது. அதாவது, மதுரையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரசில் பணியாற்றி சென்ற ஏ.சி.டெக்னீசியன்கள் சுமார் 14 மணி நேரம் திருச்சி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கினர். ஓய்வறை இல்லாததால் பணியாளர்கள் பிளாட்பாரத்தில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, தொடர்ந்து மெத்தனப்போக்குடன் நடந்து வரும் ரெயில்வே அதிகாரிகளை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் மற்றும் தலைமை ஊழியர் விவகார அலுவலர் ஆகியோர் தலையிட்டு ஏ.சி. டெக்னீசியன்களுக்கு ஓய்வறை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணமடைந்த தொழிலாளர் கென்னடிக்கு சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.