மழைக்காக ஒதுங்கி நின்றவருக்கு நேர்ந்த சோகம்: தாறுமாறாக ஓடிய அரசு விரைவு பஸ் மோதி போலீஸ்காரர் சாவு

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர், தாறுமாறாக ஓடிவந்த அரசு விரைவு பஸ் மோதி பலியானார்.

Update: 2023-03-24 09:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29). இவர், 2013-ல் தமிழக போலீஸ் துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை போலீஸ்காரர் நாகராஜன், வீட்டில் இருந்து தனது மோட்டார்சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது மழை பெய்ததால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் நிற்கும் பகுதி அருகே உள்ள மரத்தடியில் மழைக்காக ஒதுங்கி நின்றார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து அரசு விரைவு பஸ்(தடம் எண் 122) சென்னை கோயம்பேடு நோக்கி பயணிகளுடன் வந்து கொண்டு இருந்தது. பைபாஸ் சாலை முகப்பு பகுதியில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ், அங்கு மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரர் நாகராஜன் மீது மோதி, அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இதில் படுகாயம் அடைந்த போலீஸ்காரர் நாகராஜன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மரத்தில் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்