பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
ராஜபிரியா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.;
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மருதாநல்லூர் நந்திவனம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் ராஜபிரியா (வயது 21). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து விட்டு தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று தஞ்சையில் ஒரு கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு தஞ்சைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பஸ்சில் ஏறி ஊருக்கு திரும்பி வந்தார். பாபநாசம் அரசு மருத்துவனைக்கு எதிரில் பஸ் வந்தபோது ராஜபிரியா ஓடும் பஸ்சிலேயே திடீர் என்று மயக்கம் அடைந்தார்.
உடனடியாக பஸ்சை நிறுத்திய டிரைவர், சக பயணிகள் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவியின் தாயார் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் மயக்கம் அடைந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.