பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு:வரட்டாறு தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம் மாநகராட்சி 7-வது வார்டு பகுதியில் வரட்டாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம், மேம்பாலமாக மாற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-01-01 21:32 GMT

7-வது வார்டு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 7-வது வார்டில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். 13 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர். அரசு பெண்கள் கலைக்கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிலையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியவை இந்த வார்டில் உள்ளன. ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் 2 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும் கலெக்டர் பங்களா, அரசு உயர் அதிகாரிகள் குடியிருப்பு, நீதிபதிகள் குடியிருப்பும் இந்த வார்டில் உள்ளன.

ஜெயா கார்டன், கல்யாணி நகர், விஜய் நகர், சிண்டிகேட் வங்கி காலனி, சக்தி நகர், அய்யந்திருமாளிகை, போயர் தெரு, ஆத்துக்காடு, ஆன்மீக நிலையம், இந்திரா நகர், பாலாஜி நகர், பிரகாசம் நகர், லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, கம்பர் தெரு, பாரதி நகர் போன்றவை இந்த வார்டில் முக்கிய பகுதியாகும். இந்த வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி உள்ளார். மேலும் அவர் சேலம் மாநகராட்சியின் துணை மேயராகவும் பதவி வகித்து வருகிறார்.

சிறிய சாக்கடை கால்வாய்

அய்யந்திருமாளிகை, போயர் தெரு முழுவதும் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான சாக்கடை கால்வாய்களே உள்ளன. பல இடங்களில் சாக்கடை கால்வாய் உடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி கிடக்கின்றன. கொசுத்தொல்லைகள் அதிகம் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

உடையார் தெரு, மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையின் நடுவில் மின் கம்பங்கள் உள்ளன. அவற்றை அகற்றி பல இடங்களில் சாய்ந்து உள்ள மின் கம்பங்களை சரிப்படுத்த வேண்டும் என்று அங்கு உள்ள மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சிக்கு தற்போது மெயின் ரோடு வழியாக அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அஸ்தம்பட்டியில் இருந்து பூட்டு முனியப்பன் கோவில், அய்யந்திருமாளிகை, ஜட்ஜ் ரோடு வழியாக டவுன் பஸ்கள் இயக்கினால் வார்டு மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். வார்டில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

கழிப்பிட வசதி

போயர் தெருவை சேர்ந்த தங்கம்மாள்:-

எங்களது பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான சாக்கடை கால்வாய் கட்டப்பட்டன. தற்போது பல இடங்களில் சாக்கடை கால்வாய் பழுதாகி, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

மாலை நேரங்களில் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் முழுவதையும் இடித்து விட்டு பெரிதாக சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும். மேலும் கழிப்பிட கட்டிடம் இந்த பகுதியில் இல்லை. வேறு இடங்களில் உள்ள கழிப்பிடங்களுக்கு சென்று வருகிறோம். எனவே போயர் தெரு பகுதி மக்களுக்காக புதிதாக கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.

புதர் மண்டிய பூங்கா

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜாவித்:-

பிரகாசம் நகரில் பசுமை வெளிபூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வருகிறோம். மேலும் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இந்த பூங்கா தற்போது பராமரிப்பின்றி உள்ளது. மின் விளக்கு, குடிநீர் வசதி இல்லை.

மேலும் விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி விட்டன. அவற்றை சீரமைத்து, பூங்காவை புதுப்பித்து கொடுக்க வேண்டும். இதேபோல் எழில் நகரில் உள்ள பூங்காவும் பராமரிப்பின்றி உள்ளது. அதையும் சீரமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆழ்துளை கிணறு

அய்யந்திருமாளிகையை சேர்ந்த கவிதா:-

இந்த பகுதியில் வெகு தொலையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் உப்பு தண்ணீரை அதிக தூரம் சென்று பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அய்யந்திருமாளிகை மெயின் ரோட்டில் சப்-கனெக்ஷன் கொடுத்து உப்பு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் தார்சாலை, மண் சாலையாக மாறிவிட்டன.

அவற்றை சீரமைக்க வேண்டும். அய்யந்திருமாளிகையில் 17 குறுக்கு தெருக்கள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடக்கின்றன. எனவே கழிவு நீர் வெளியேறாமல் உள்ள சாக்கடை கால்வாய் முழுவதையும் இடித்து விட்டு புதிதாக சாக்கடை கால்வாய் கட்டித்தர வேண்டும்.

தண்ணீர் ஏற்றுவது நிறுத்தம்

கோரிமேட்டை சேர்ந்த ஜெயராக்கினி:-

வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து ஆத்துக்காடு, கோரிமேடு, பாண்டியன் நகர், ஏ.டி.சி.நகர், அய்யந்திருமாளிகை, கலெக்டர் பங்களா பின்புறம் ஆகிய பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது குடிநீர் தொட்டிகள் மிகவும் பழுதாகி காணப்படுகிறது. இதனால் பல மாதங்களாக அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழுதாகி உள்ள குடிநீர் தொட்டிகளை இடித்து, புதிய தொட்டிகளை விரைவாக கட்டி கொடுக்க வேண்டும்.

உயர்மட்ட மேம்பாலம்

ஆத்துக்காட்டை சேர்ந்த பால் வியாபாரி மோகன்குமார்:-

கலெக்டர் பங்களா பின்புறம் வரட்டாற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால், தரைப்பாலம் பழுதாகி உள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர்கள் இல்லை.

ஏற்காட்டில் அதிகமாக மழை பெய்யும் போது, வரட்டாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் இந்த பாலம் தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அப்போது பாலத்தை கடக்க முடியாமல் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. சிலர் ஆபத்தை உணராமல் பாலத்தை கடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதேபோல் சுடுகாட்டிற்கு செல்லும் பாலமும் தடுப்புச்சுவர் உடைந்து பழுதாகி காணப்படுகிறது. எனவே இந்த 2 பாலங்களையும் இடித்து அகற்றி, புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

என்ன சொல்கிறார் துணை மேயர்?

இது குறித்து துணை மேயர் சாரதாதேவி கூறியதாவது:-

நான் சேலம் மாநகராட்சி துணை மேயராக பதவி ஏற்று 9 மாதம் ஆகிறது. அன்றில் இருந்து இன்று வரை தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சைக்கிளில் சென்று வார்டு மக்களை நேரில் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். மழை காலங்களில் மொபட்டில் செல்வது வழக்கம். இந்த வார்டில் பெரிய அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வார்டை சுத்தமாக பராமரித்து வருகிறேன்.

வார்டில் பழுதாகி உள்ள 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும், பூங்காக்கள் பராமரிக்கவும், சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பிட கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி மேயரிடம் கோரிக்கை வைத்தேன். வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்து உள்ளார். மாநகராட்சி கூட்டத்திலும் 7-வது வார்டில் பணிகள் நடைபெற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோரின் ஒத்துழைப்போடு, வார்டு பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்