காட்டு யானைகள் முகாமிடுவதால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
கூடலூர்,
கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
நடமாட்டம் அதிகரிப்பு
கூடலூர் பகுதியில் தற்போது பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி ஊருக்குள் முகாமிட்டு உள்ளன. இதன் காரணமாக மனித-வனவிலங்கு மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. கூடலூரில் நடப்பாண்டில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது.
இதனால் காட்டு யானைகளால் மனித உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் காட்டு யானைகள் விரும்பி உண்ணும் பலாப் பழங்களை மரங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். வன ஊழியர்களும் பலா காய்களை அகற்றி வருகின்றனர்.
வனத்துறையினர் எச்சரிக்கை
இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர், 27-வது மைல், தெய்வ மலை, ஊசி மலை உள்ளிட்ட இடங்களில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் காணப்படுகிறது. தொடர்ந்து இரவில் சாலையில் வந்து முகாமிடுகிறது. இதனால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகிறது. இரவில் நடுவழியில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நிற்கின்றனர். மலைப்பாதை என்பதால் வாகன ஓட்டிகள் இரவில் கவனமுடன் வர வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கூடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. இதேபோல் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையிலும் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் கூட்டம் பல இடங்களில் தென்படுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து இரவில் கூடலூருக்கு வரும் வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.