கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் தா.மோ.அன்பரசன்

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

Update: 2024-06-14 05:09 GMT

சென்னை,

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கிளாம்பாக்கம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மே.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதை சரி செய்வதற்கு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை தர உள்ளார்கள். அந்த அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம். இருக்கி்ற பிரச்சினைகளை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குழுவினரிடமிருந்து 10 நாட்களுக்குள் அறிக்கை பெறப்பட்டு அறிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும், கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் தொடர்பாக பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

வண்டலூர் முதல் காட்டாங்கொளத்தூர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியாகும். அதேபோன்று சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட பஸ் நிறுத்தங்கள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்