போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பாலக்கோடு நகரம்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பாலக்கோடு நகரில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு:
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் பாலக்கோடு நகரில் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேகமாக வளரும் நகரம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பது பாலக்கோடு. பாலக்கோட்டை மையமாக கொண்டு அமைந்துள்ள 32 ஊராட்சிகளில் 230 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தக்காளி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை, தனியார் பால் நிறுவனங்கள், தனியார் மாங்கூழ் தயாரிக்கும் ஆலைகள், தென்னை நார் தொழிற்சாலை, கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மண்டிகளில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினமும் 700 டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த பகுதியில் 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், 200 படுக்கை வசதிகள் கொண்ட நவீன அரசு பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு மகப்பேறு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ள பாலக்கோடு நகரம் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பாலக்கோட்டில் கடந்த 1990-ம் ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பாலக்கோடு பகுதியில் குறைந்த அளவிலேயே மக்கள் தொகை இருந்தது. அதற்கேற்ப பஸ்கள் இயக்கப்பட்டன. 32 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது அபார வளர்ச்சி அடைந்துள்ள பாலக்கோடு நகரில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்குள்ள பஸ் நிலையத்திற்கு டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் என தினமும் 200-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன.
இதேபோல் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் 80 ஷேர் ஆட்டோக்கள், வாடகை கார்கள், சரக்கு வாகனங்கள் பஸ் நிலைய பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், எம்.ஜி. ரோடு, கடைவீதி, ஸ்தூபி மைதானம், கெசர்குளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த பகுதியை எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
சிரமத்திற்கு உள்ளாகும் பயணிகள்
பாலக்கோடு பஸ் நிலையத்தின் உள்பகுதியை சுற்றி தனியார் வணிக நிறுவனங்கள், கடைகள் செயல்படுகின்றன. இவற்றிற்கு வாடிக்கையாளர்கள் பஸ் நிலையம் வழியாகவே வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ் நிலைய வளாகத்தை ஒட்டி மகளிர் போலீஸ் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகியவை செயல்படுவதால் அங்கு வருபவர்களும் பஸ் நிலையத்திற்குள்ளேயே மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவற்றை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் போதிய அளவில் இடவசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே பஸ் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாலக்கோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய புறநகர் பஸ் நிலையம்
டாக்டர் ரவிச்சந்திரன்:-
தர்மபுரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கிறார்கள். இதனால் இங்குள்ள பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போதிய இட வசதி இல்லை. குறிப்பாக பஸ் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. பாலக்கோடு நகர வளர்ச்சிக்கு ஏற்ப பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது உள்ள பஸ் நிலையத்தை டவுன் பஸ் நிலையமாக மாற்ற வேண்டும். வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நகரத்தின் வெளிப்பகுதியில் புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் சரவணன்:-
பாலக்கோடு நகரத்தை ஒட்டி புதிய பசுமை 4 வழிச்சாலை தர்மபுரியில் இருந்து ஓசூர் வரை அமைக்கப்பட்டு வருகிறது. இதை 6 வழிச்சாலையாக விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் பாலக்கோடு பகுதி விரைவாக வளர்ச்சி அடையவும், பல்வேறு தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் இங்கு வரவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும்.
விபத்துகள் தடுக்கப்படும்
குடும்பத்தலைவி மாதேஸ்வரி:-
பாலக்கோட்டில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் இங்குள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலக்கோடு பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றினால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.