சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் தொடர் மழையால் சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்
கூடலூரில் தொடர் மழையால் சாலையில் மூங்கில்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூங்கில்கள் விழுந்தது
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் பாண்டியாறு உள்பட அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. ஆனால் கனமழை பெய்யாததால் குறைந்த அளவிலே தண்ணீர் செல்கிறது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில்கள் சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மண்சரிவு அபாயம்
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் மூங்கில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பெருமளவில் மூங்கில்கள் சரிந்து கிடந்ததால் உடனடியாக அகற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மூங்கில்களை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.